ஆண்டு 1948 – ஆண்டு 1959
இன்று மலேசிய திருநாட்டின் முதல் நிலைப் பல்கலைக்கழகமாகத் திகழும் மலாயாப் பல்கலைக்கழக,1948 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரையில் சிங்கப்பூரில் இயங்கி வந்தது. இந்திய ஆய்வியல் துறை அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தூண்டுதலின் பயனாக, மலாயா-சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் பெருமக்களின் நீண்ட கால அன்பு வேண்டுகோளினை நிறைவேற்றும் வகையில், மலாயாப் பல்கலைக்கழகம் வளாகத்தில் கலைப் புலத்தின் ஓர் அங்கமாக 1956ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.அப்போது,மலாயாப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த இந்திய வம்சாவளி மாணவர்களுக்கென்று ‘இந்திய கலாச்சார சங்கம்’ என்னும் அமைப்பு இயங்கி வந்தது. ஆயினும், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகிய பாடங்களை இந்திய ஆய்வியல் துறையில் பயின்று வந்த மாணவர்கள், தமிழ்ப் பேரவை என்னும் மாணவர் அமைப்பினை நிறுவும் முயற்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். 1959 ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்குப் புலம் பெயர்ந்தபோது சிங்கப்பூரில் இயங்கி வந்த இந்திய ஆய்வியல் துறையும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் புதிய கலைப்புலத்தின் ஓர் அங்கமாக கோலாலப்பூர் வளாகத்தில் இன்று வரை இயங்கிவரலாயிற்று. அப்போது, மலாயாப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உயர்கல்வி பயின்றுவந்த மாணவர்களும் தத்தம் துறைகளைச் சார்ந்த மாணவர் சங்கங்களை உருவாக்கினர். எடுத்துக்காட்டாக, மலாய் மொழிச் சங்கம், வரலாற்றுச் சங்கம்,பொருளாதாரச் சங்கம் போன்ற மாணவர் இயக்கங்கள் தோற்றம் கண்டன. மலாயாப் பல்கலைக்கழக ஆளுநர் மன்றமும் மாணவர்களின் ஆர்வத்தை வரவேற்று அந்தப் பல்வேறு சங்கங்களின் அமைப்பு விதிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் பணியினைச் செய்வதற்கென்று மாணவர் நல ஆணயம் ஒன்றை உருவாக்கி உதவியது. சிங்கப்பூரில் இயங்கிவந்த இந்திய ஆய்வியல் துறையின் முதலாவது தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களாகிய திரு. கு. பதமநாபன், திரு. பாரதாஸ் கோபால், திரு எஸ். சிவலிங்கம், திரு. ச. சிங்காரவேலு, செல்வி. தேவகி இராஜமாணிக்கம் ஆகிய ஐவரும் சிங்கப்பூரில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் 1959 ஆம் ஆண்டு முதல் கோலாலம்பூர் வளாகத்தில் இயங்கி வந்த இந்திய ஆய்வியல் துறையில் ‘ஆனர்ஸ்’ பட்டம் பெற வேண்டி, சிறப்புத் தமிழ்க் கல்வி பயின்று வந்த வேளையில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றுவந்த ஏனைய தமிழ் மாணவர்களுடன் சேர்ந்து தமிழ்ப் பேரவையை நிறுவும் பணியில் ஈடுப்பட்டனர். தமிழ்ப் பேரவையை அமைப்பதற்குரிய வழிமுறைகளை ஆராய்வதற்கென்று நிறுவப்பட்ட செய்ற்குழுவின் தலைவராக திரு. ச. சிங்காரவேலு பணியாற்றினார். இதன் வாயிலாக 1959 ஆம் ஆண்டு தமிழ்ப் பேரவை உருவாக்கம் காணும் ஆண்டாக வகைப்படுத்தப்படும் வேளை அதன் முதன் தலைவராக இன்று நிறைநிலைப் பேராசிரியராகத் திகழும் முனைவர் சிங்காரவேலு அவர்கள் மதிக்கப்படுகிறார்.