மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் வரலாறு

இன்று மலேசிய திருநாட்டின் முதல் நிலைப் பல்கலைக்கழகமாகத் திகழும்
மலாயாப் பல்கலைக்கழக, 1948 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரையில்
சிங்கப்பூரில் இயங்கி வந்தது. இந்திய ஆய்வியல் துறை அமரர் தமிழவேள் கோ.
சாரங்கபாணி அவர்களின் தூண்டுதலின் பயனாக, மலாயா-சிங்கப்பூர் வாழ் தமிழ்ப்
பெருமக்களின் நீண்ட கால அன்பு வேண்டுகோளினை நிறைவேற்றும் வகையில்,
மலாயாப் பல்கலைக்கழகம் வளாகத்தில் கலைப் புலத்தின் ஓர் அங்கமாக 1956 ஆம்
ஆண்டில் நிறுவப்பட்டது.
அப்போது, மலாயாப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த இந்திய வம்சாவளி
மாணவர்களுக்கென்று ‘இந்திய கலாச்சார சங்கம்’ என்னும் அமைப்பு இயங்கி வந்தது.
ஆயினும், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகிய பாடங்களை
இந்திய ஆய்வியல் துறையில் பயின்று வந்த மாணவர்கள், தமிழ்ப் பேரவை என்னும்
மாணவர் அமைப்பினை நிறுவும் முயற்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.
1959 ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்குப் புலம்
பெயர்ந்தபோது சிங்கப்பூரில் இயங்கி வந்த இந்திய ஆய்வியல் துறையும் மலாயாப்
பல்கலைக்கழகத்தின் புதிய கலைப்புலத்தின் ஓர் அங்கமாக கோலாலப்பூர் வளாகத்தில்
இன்று வரை இயங்கிவரலாயிற்று.
அப்போது, மலாயாப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உயர்கல்வி
பயின்றுவந்த மாணவர்களும் தத்தம் துறைகளைச் சார்ந்த மாணவர் சங்கங்களை
உருவாக்கினர். எடுத்துக்காட்டாக, மலாய் மொழிச் சங்கம், வரலாற்றுச் சங்கம்,
பொருளாதாரச் சங்கம் போன்ற மாணவர் இயக்கங்கள் தோற்றம் கண்டன. மலாயாப்
பல்கலைக்கழக ஆளுநர் மன்றமும் மாணவர்களின் ஆர்வத்தை வரவேற்று அந்தப்
பல்வேறு சங்கங்களின் அமைப்பு விதிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் பணியினைச்
செய்வதற்கென்று மாணவர் நல ஆணயம் ஒன்றை உருவாக்கி உதவியது.
சிங்கப்பூரில் இயங்கிவந்த இந்திய ஆய்வியல் துறையின் முதலாவது
தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களாகிய திரு. கு. பதமநாபன், திரு. பாரதாஸ்
கோபால், திரு எஸ். சிவலிங்கம், திரு. ச. சிங்காரவேலு, செல்வி. தேவகி
இராஜமாணிக்கம் ஆகிய ஐவரும் சிங்கப்பூரில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர்
1959 ஆம் ஆண்டு முதல் கோலாலம்பூர் வளாகத்தில் இயங்கி வந்த இந்திய ஆய்வியல்
துறையில் ‘ஆனர்ஸ்’ பட்டம் பெற வேண்டி, சிறப்புத் தமிழ்க் கல்வி பயின்று வந்த
வேளையில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றுவந்த ஏனைய தமிழ்
மாணவர்களுடன் சேர்ந்து தமிழ்ப் பேரவையை நிறுவும் பணியில் ஈடுப்பட்டனர்.
தமிழ்ப் பேரவையை அமைப்பதற்குரிய வழிமுறைகளை ஆராய்வதற்கென்று
நிறுவப்பட்ட செய்ற்குழுவின் தலைவராக திரு. ச. சிங்காரவேலு பணியாற்றினார்.
இதன் வாயிலாக 1959 ஆம் ஆண்டு தமிழ்ப் பேரவை உருவாக்கம் காணும் ஆண்டாக
வகைப்படுத்தப்படும் வேளை அதன் முதன் தலைவராக இன்று நிறைநிலைப்
பேராசிரியராகத் திகழும் முனைவர் சிங்காரவேலு அவர்கள் மதிக்கப்படுகிறார்.

1960 ஆம் ஆண்டு, இந்திய ஆய்வியல் துறையின் இரண்டாம் தலைமுறையைச்
சேர்ந்த மாணவர்களுள் ஒருவரான திரு. இராம சுப்பையா தமிழ்ப் பேரவையின்
தலைவராகப் பொறுப்பேற்றார். அவருக்குப் பிறகு, இது வரையில் சுமார் அறுபது பேர்
தமிழ்ப் பேரவையின் தலைவர்களாகத் தொண்டாற்றியுள்ளதோடு, அவர்களில் பலர்
இன்று மலேசியத் திருநாட்டின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப்
பணியாற்றிவருகின்றனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை நிறுவப்பட்ட காலத்திலிருந்தே
மாணவர் நலனையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு வகை
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வெற்றிக்கண்டுள்ளது. ஆரம்ப காலத்தில், தமிழ் மொழி,
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளை
இந்திய ஆய்வியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்களின் ஆதரவோடும்
வழிக்காட்டுதலோடும் ஏற்பாடு செய்துவந்துள்ளது. அவற்றில், இலக்கியப்
பேருரைகள், கவியரங்கம், தமிழ்ச் சொற்போர், கருத்தரங்குகள், பண்பாட்டு
நிகழ்ச்சிகள் ஆகியவையும் அடங்கும்.
தமிழ்ப் பேரவை ஆற்றியுள்ள மிகவும் முக்கியமான பணிகளில் ஒன்று தமிழ்,
மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரிய ஆய்வுக்கட்டுரைகள்
அடங்கிய தமிழ் ஒளி எனப்படும் ஆண்டு ஆய்விதழை 1959 ஆம் ஆண்டு முதல்
வெளியிட்டுவரும் உயர்கல்வித் தொண்டாகும். இம்மலேசிய நாட்டிலேயெ எந்தவொரு
பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளில் இயங்கி வரும் இந்திய மாணவர்
இயக்கங்கள் செய்திடாத அரும் பெரும் சாதனையைத் தமிழ் ஒளி ஆய்விதழை
வெளியிட்டு கல்வியியல் உலகில் சரித்திரம் படைத்துள்ளது. இந்த ஆய்விதழை பல
பண்நாட்டுத் தூதரகங்களின் துணையுடன் கொரியா, ஜப்பான், இந்தியா போன்ற
உலக நாட்டிற்கும் தமிழ்ப் பேரவை தனது பங்களிப்பாக அனுப்பி வைத்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆய்வியல் துறையில் கல்விக் கற்ற மாணவர்களே
தமிழ் ஒளியின் ஆசிரியர் குழு உறுப்பினர்களாக அமைந்து, கல்வித் தரமுடைய அரிய
ஆய்வுக் கட்டுரைகளை எழுதியும் சேகரித்தும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய
பெருமைக்குரியவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக
மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடையே தமிழ் இலக்கியம் மென்மேலும்
வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்தோடு தமிழ்ச் சிறுகதை எழுதும் போட்டியைக
கடந்த 1982 ஆம் ஆண்டுத் தொடங்கி ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது.
சிறந்த கதையாசிரியர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கி வருவதோடு பரிசுப் பெற்ற
மணிக்கதைகள் அடங்கிய தொகுதிகளையும் நூலாக வெளியிடும் அரும் பணியையும்
மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை ஆற்றிவருகிறது. குறிப்பாக, இம்மலேசிய
நாட்டில் சிறுகதைப் போட்டியினை நடத்தி வரும் தமிழ்ப் பேரவை உலகிலேயே
எந்தவொரு இந்திய மாணவர் இயக்கம் செய்திடாத இலக்கியத் திட்டத்தினைச்
செம்மையாகச் செய்து 32 ஆண்டுகளாக வெற்றிநடைப்போடுகிறது.

மேலும், மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஆக மூத்த
நடவடிக்கைகளுள் ஒன்று மாணவ சமூக நல அணியாகும். 1973 ஆம் ஆண்டு முதல்
கடந்த 45 ஆண்டுக்காலமாக தமிழ்ப் பேரவையினர் மாணவ சமூக நல அணி
உறுப்பினர்களாக மலேசிய நாட்டிலுள்ள தோட்டங்களுக்குச் சென்று அங்கேயே
தங்களின் விடுமுறைக்காலங்களில் தங்கி அவர்களின் மேம்பாட்டிற்கு
வழிவகுத்துள்ளனர். கால மாற்றம், பல்கலைக்கழகத்தில் தவணை முறையில் மாற்றம்
ஆகிய காரணங்களால் சமீபக் காலமாக இத்திட்டம் குறுகிய கால அளவுகளில்
மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சமூக நலன்
சார்ந்த சிந்தனைகளை இத்திட்டத்தின் மூலம் வளர்க்க முடிகின்றது.
மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை சார்பில் பல்வேறு வகை
நிகழ்ச்சிகளை அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்யும் மாணவர்கள் அவற்றின் மூலம் புதிய
அனுபவத்தைப் பெறுகின்றனர். இத்தகைய அனுபவமே பல்கலைக்கழக உயர்கல்விச்
சார்புடைய அனுபவமாக அமைவதால் இந்த அனுபவம் அவர்களுடைய பிற்கால
வாழ்வியலுக்குப் பேர் உதவியாக விளங்கும் என்பது திண்ணம். வாழ்க தமிழ்ப்
பேரவை! வளர்க தமிழ்ப் பேரவையின் சீரிய தொண்டு!